Friday, February 22, 2008

பெண்ணின் போராட்டம் -- மூளைவளர்ச்சி குன்றிய மாமேதை!

தோழி,

உன்னைப் போலவே இன்னுமொரு போராளியை பற்றி படித்தேன்... பெண்ணிடம் தான் எத்தனை பலம். கேளு...

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
அதிலும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

என்று பாடினார் ஔவையார்.

சிதம்பரத்தைச் சேர்ந்த லலித்குமார் பிறவியிலேயே ஊனமுற்றவர், பார்வையற்றவர், கேட்கும் திறன் இல்லாதவர், மூளை வளர்ச்சி குன்றியவர். இன்று பதினெட்டு வயதாகும் இவர் திருக்குறள், தேவராம், திருவாசகம் எல்லாம் மனப்பாடம் செய்து சொல்கிறார், யோகாசனம் பழகி முன்னூற்றம்பது ஆசனங்களுக்கு மேல் செய்து காட்டுகிறார், குடியரசுத் தலைவர் கையால் பரிசு வாங்கியிருக்கிறார். அதிசயமாக இருக்கிறதல்லவா? இவரைப் பற்றியும், இவரை பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் வளர்த்து ஆளாக்கிய இவரது பெற்றோரைப் பற்றியும் இந்த மாத மங்கையர் மலரில் “யாதுமாகி நின்றாள்” என்ற பெயரில் நம்பிக்கையூட்டும் கட்டுரை ஒன்று வந்துள்ளது. லலித்குமாரை வளர்த்து சாதனையாளனாக ஆக்க அவரது பெற்றோர்கள் மேற்கொண்ட முயற்சிகள், புரிந்த தியாகங்கள் தான் என்னென்ன! இந்த கட்டுரையைப் படித்தபோது எனக்கு ஹெலன் கெல்லர், ஆனி சுலைவன் ஆகியோரின் நினைவு தான் வந்தது. லலித்குமார் மென்மேலும் சாதனைகள் படைத்து நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர என் வாழ்த்துக்கள்.

இந்த கட்டுரையை இதுவரை படிக்காதவர்களுக்காகவும், ‘மங்கையர்’ மலரை கையில் எடுப்பதை பெரிய கௌரவக்குறைச்சலாக கருதும் தன்மான ஆண் சிங்கங்களுக்காகவும், TSCII காரணத்தால் மங்கையர் மலர் வலைத்தளத்தில் இக்கட்டுரையை படிக்க இயலாதவர்களின் வசதிக்காகவும் கீழே கட்டுரையை copy/paste செய்கிறேன்



“ஏம்பா அஞ்சலி பாப்பாவை எனக்குத் தங்கச்சியா கடவுள் பொறக்க வெச்சாரு… எதிர் வீட்டுலியோ, பக்கத்து வீட்டுலியோ பிறக்க வெச்சிருக்கலாமேப்பா!” என்று குழந்தைகள் கேட்பார்கள்.

“இது, கடவுளுக்குப் பிடிச்ச குழந்தை. இதைப் பத்திரமா பார்த்துக்கிறதுக்கு, நல்ல அப்பா, நல்ல அம்மா, உங்களை மாதிரி நல்ல அண்ணா, அக்கா வேணும்னுதான் நம்ப வீட்டுக்கு அனுப்பி வெச்சுட்டாரு!” என்று பதில் சொல்வார் ரகுவரன்.

– மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் ஒரு காட்சி.

சிதம்பரத்தைச் சேர்ந்த மோகன் - பத்மா தம்பதிக்கு, தேவதை தந்த குழந்தைதான் லலித்குமார். பிறவியிலேயே பார்வை இல்லாமல், மூளை வளர்ச்சி குன்றிப் பிறந்தவன். ஒரு காதில் செவித் திறன் இல்லை; உடலின் வலது பக்க எலும்புகளின் அமைப்பும் சரியில்லை. சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கரங்களால் ‘பெஸ்ட் க்ரியேடிவ் சைல்ட’ என்று தேசிய விருது வாங்கி வந்திருக்கிறான்.

இது எப்படி சாத்தியமானது? லலித்குமாரின் தாயார் பத்மா மோகனைச் சந்தித்தபோது…

நான் ஒரு பி.எஸ்ஸி., பட்டதாரி ஸ்டேட் பாங்க்கில் பணியிலிருந்த மோகனுடன் திருமணம் ஆனது. பெரியவர்கள் நிச்சயித்த திருமணம்.

போளூரில் கூட்டுக் குடும்ப வாழ்க்கைத் தொடங்கியது. அன்பான புகுந்த வீடு. அருமையான கணவர். எங்கள் சந்தோஷமான வாழ்க்கைக்குச் சான்றாக நான் கர்ப்பமானேன். எனக்கு நாற்பது நாளான போது, புட்டம்மை கண்டது. என் மாமியார் சுக்கு, சீரகக் கஷாயம் வைத்துக் கொடுத்தார். மறு நாளே ஜுரம் குறைந்து விட்டது. அதனால் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

1989. அக்டோபர் 16ம் நாள். எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. “பரணி நட்சத்திரத்தில் பையன் பிறந்திருக்கான்… தரணியை ஆளப் போறான்”ன்னு சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.

குழந்தை பிறந்தபோது எங்க அப்பா, அலுவலக வேலையாக ஜப்பான் போயிருந்தார். பேரன் பிறந்த செய்தியைக் கேட்டதும், சிங்கப்பூரில் இறங்கி, விதவிதமான பொம்மைகள் வாங்கிக் கொண்டு நள்ளிரவு ஒரு மணிக்கு, ஏர்போர்ட்டிலிருந்து நேரே மருத்துவமனை வந்துவிட்டார். ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் பேரன் லலித்குமாரின் முகத்துக்கு எதிரே வண்ண வண்ண பொம்மைகளை ஆட்டி ஆட்டி காட்டி ரொம்ப நேரம் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

பச்சையோ, சிவப்போ மட்டுமல்ல… தன்னுடைய பேரனால் இந்த உலகில் உள்ள எதையுமே பார்க்க முடியாது என்று அவருக்கு அப்போது தெரியாது!”

“குழந்தைக்கு மூன்று மாதமானது. குழந்தையைக் கூர்ந்து கவனித்த எனக்கு என்னவோ சந்தேகம் ஏற்பட்டது. தாய்ப்பால் குடிக்கும் போது கூட, அவன் எதையோ துழாவுவதாகப்பட்டது. எழும்பூர் கண் மருத்துவமனைக்குப் போனோம். பாரிசோதித்து விட்டு, “உங்கக் குழந்தைக்கு இரண்டு கண்களிலும் பார்வையில்லை!” என்று சொன்னார்கள். என் மீது ஒரு கூடை நெருப்பை அள்ளிக் கொட்டியது போல இருந்தது. “அய்யோ… என்ன சொல்றீங்க?” என்று அலறியே விட்டேன். ஆனாலும் உள்மனசில் ஒரு நம்பிக்கை.. ‘தப்பா டயக்னாஸிஸ் பண்ணியிருப்பாங்க!’ என்று தேற்றிக் கொண்டு, மறுநாளே சங்கரநேத்ராலயா போனோம். அங்கேயும் அதே பதில்…

டெல்லியில் உள்ள ‘ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ்’ கழகத்தில் காண்பித்தோம். சங்கர நேத்ராலயாவில் சொன்னதைத்தான் சொன்னார்கள்.

“உங்கள் குழந்தைக்கு ‘பீட்டர்ஸ் அனாமலி’ என்கிற பிரச்னை உள்ளது. மூன்று வயதில்தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும். மாற்றுக்கண் பொருத்துவதைத் தவிர வேறு சிகிச்சைகள் பயன்தராது’ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.

லலித்தின் ஒரு வயதில் எக்மோர் மருத்துவமனையில் நடந்த சிகிச்சையும் தோல்வியடைந்தது.

இது தவிர, சித்தா, அக்யுபஞ்சர் முதல் கோயில், குளம், பாரிகாரம் என யார் யார் என்ன சொன்னாலும் அதைச் செய்ய ஆரம்பித்தோம். குழந்தையை மடியில் போட்டுக்கிட்டு, “ஐயோ… என் குழந்தைக்குக் கண் இல்லையே! இதை எப்படி வளர்ப்பேன்!”ன்னு நினைப்பேன். என்னையுமறியாமல் துக்கம் கிளம்பி, கண்ணீர் பொங்கும்.

ஒருமுறை ஹோமியோபதி டாக்டரைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது, நான் அழுதுகொண்டே பால் கொடுப்பதை அவர் பார்த்துவிட்டார்.

“நீயும் உன் குழந்தையும் வேறு வேறல்ல. உன் ஜீவன்தான் அது! உன் உணர்வுகள் அதையும் பாதிக்கும். நீ அழுதுகிட்டே பால் கொடுத்தா, அது விஷமா மாறிடும்”னு சொன்னார்.

அதிலிருந்து அழறதைக் கூட நிறுத்திட்டேன். சென்னையில் உள்ள லிட்டில் ஃப்ளவர் பள்ளிக்குச் சென்று, லலித்தைப் பழக்கக் கற்றுக் கொண்டேன். ‘ப்ரெய்லி’யும் படித்தேன்.

“என் குழந்தைக்கு ஒரு வருஷம் முடிந்தபோது, அவனுக்கு மற்ற புலன்களிலும் ஏதோ குறைபாடு இருப்பதாகத் தோன்றியது. நடுவே வலிப்பும் வந்து அவஸ்தைப்படவே, நியூராலஜிஸ்ட்கிட்டே போனோம். டாக்டர் பாப்பகுமாரிகிட்ட போனோம். அவங்க ரொம்பவே அனுபவசாலி! பார்த்தவுடனேயே சொல்லிட்டாங்க…” “ஆடிஸம், மென்டல் ரிடார்டேஷன் இருக்கேம்மா” என்று!

“அப்படின்னா என்ன டாக்டர்?”னு கேட்டேன்.

“மூளை வளர்ச்சி குறைபாடும்மா!”ன்னாங்க பாருங்க…

தலையில் இடி விழுந்த அதிர்ச்சியில நிலைகுலைஞ்சு போயிட்டேன்.

“இந்தப் பிஞ்சை ஏதாவது உருப்படியா ஆக்காமல் விடக்கூடாதே! என்ன செய்வேன்? என்ன செய்வேன்?”னு மனசும் உடலும் துடிதுடித்தது.

ஆடிஸம் குறைபாடுகளுக்கு வேலூர் சி.எம்.ஸியில் டாக்டர் எம்.ஸி. மேத்யூ ரொம்பப் பிரபலமானவர் என்று அறிந்ததும் அங்கேயும் ஓடினோம்.

லலித்தை விட கொஞ்சம் தேறிய குழந்தையைப் பார்க்கும்போது, “நம்ம குழந்தையும் இவனைப் போல குணமாயிடுவான்!” என்று ஆறுதல் கொள்வேன்.

எனக்கு எந்தக் காலத்திலும் ஆரோக்கியமான குழந்தையைப் பார்த்தால் பொறாமையோ, சுயபச்சாதாபமோ ஏற்படவே ஏற்படாது. அந்தக் குணத்துக்காகவும் நான் கடவுளுக்கு நன்றி சொல்வதுண்டு” என்று சொல்லி நிறுத்தினார் பத்மா மோகன்.

“ஒரு தாயா…உங்க மனஉணர்வைச் சொல்லிக்கிட்டே வந்தீங்க… உங்க கணவர்… அவரோட ரியாக்ஷன் என்ன…?” என்று கேட்டோம்.

“நீங்க அவர்கிட்டேயே கேளுங்களேன்!” என்றார் பத்மா சின்ன சிரிப்புடன்.

ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த லலித்தை அன்புடன் அணைத்தவாறே, “ஆரம்பத்துல ரொம்பவே ‘ஷாக்’ ஆயிட்டேன். அப்புறமா… சாரி..ஆனது ஆயிடுச்சு. அதையே நினைச்சுக் கவலைப்படறதுல அர்த்தமில்லை. இனி என்ன செய்யலாம்னு பார்ப்போம்னு தீவிரமா இறங்கிட்டேன். லலித், அவனோட சிகிச்சை இதுக்குத்தான் வீட்ல முதல் உரிமை. மத்த எல்லாமே அப்புறம் தான்னு முடிவான பிறகு… பத்மாவோட எந்த முயற்சிக்கும் நான் தடை போடலை” என்றார்.

“நிஜம்தான்! நான் இன்னிக்கு.. இந்த டாக்டரைப் பார்க்கப் போறேன். எனக்கு இவ்ளோ பணம் வேணும்” என்பேன். கொஞ்சமும் முகம் சுளிக்காமல் எடுத்துத் தருவார். அவரோட பொறுமையும் ஒத்துழைப்பும் இல்லைன்னா எதுவுமே நடந்திருக்காது” என்கிறார் பத்மா.

இதற்கு நடுவே மோகனுக்கு சிதம்பரத்துக்கு மாற்றலாகி விடவே, இன்னொரு துன்பமும் நேர்ந்திருக்கிறது. திடீரென்று பத்மாவுக்கு முதுகுத்தண்டில் டிஸ்க் நழுவி, ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். வலி மிகுந்த அந்த அனுபவம் பற்றிப் பேசினார் பத்மா.

“இடுப்புக்குக் கீழே உணர்வே இல்லாமல், அப்படியே கிடந்தேன். உதவிக்கு அம்மாவும், தங்கைகளும் இருந்தாலும் குழந்தையைப் பார்த்துக்கறது, பெட்ஃபேன் வைக்கிறது எல்லாமே என் கணவர்தான். அப்புறமா ட்ராக்ஷன் போட்டாங்க. பிஸியோதெரபி எடுத்துக்கிட்டதுல ஏதோ கொஞ்சம் குணமாச்சு. “யோகா பண்ணுங்க. அப்பத்தான் ரிலீஃப் கிடைக்கும்”னு டாக்டர் சொல்லவே, யோகா கற்றுக் கொண்டேன்.

‘என்ன ஆச்சாரியம்! யோகாவினால் நல்ல மாற்றம் தொரிஞ்சது. நான் மறுபடி நார்மலாகி விட்டேன். அப்பத்தான் எனக்கு அந்த ஐடியா தோணுச்சு. “நம்ப லலித்தையும் யோகா செய்ய வைக்கலாமே!”ன்னு முதல்ல பிராணாயாமம் செஞ்சு காட்டணுமே!’ மூச்சை இழுத்து விடு!”ன்னு சொன்னா அவனுக்கு எப்படிப் புரியும்?

அவனால பார்த்தும் செய்ய முடியாதே! அதனால ஒரு மல்லிகைப் பூவை மூக்குல வெச்சு, ஸ்டெதெஸ்கோப் போல எதையாவது நெஞ்சுல பதிச்சா, அவன் ஹாஸ்பிடல் நினைப்புல வாசனையை முகர்வான்! அதையே நாளடைவுல தானாவே செய்ய ஆரம்பிச்சான். முதல்ல அவனை பத்மாசனத்துல உட்கார வெக்கறதே கஷ்டமா இருந்தது. அவன் விறைப்பா வைக்க வேண்டிய உறுப்பு மேலே கையை அழுத்தி வைச்சா, உடனே அவன் ‘டைட்’ ஆக்கிக் கொள்வான். தளர்வா இருக்கணும்னா, அதுக்குத் தடவித் தரணும். இப்படி ‘நுகர்வு’ ‘ஸ்பாரிசம்’, ‘ஒலி’ இந்த மூன்று புலன்களின் மூலம் மெள்ள மெள்ள ஒவ்வொரு ஆசனமாகக் கற்க ஆரம்பித்தான்.

இதற்காக, அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் உடற்பயிற்சியாளர் நடராஜன் பட்டபாடு இருக்கே! அவனுடன் மல்லுக்கு நின்று, பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார். இன்றைக்கு லலித்துக்கு முந்நூற்று ஐம்பது ஆசனங்களுக்கும் மேலாகத் தொரியும் என்றால், முழு பெருமையும் நடராஜன் மாஸ்டரையே சாரும்” என்று நன்றியுடன் சொன்னார் பத்மா.

“யோகா மட்டுமல்லாது, திருக்குறள், தேவாரம், திருவாசகம், புரந்தரதாசர் கீர்த்தனைகள் என நிறைய மனப்பாடம் செய்து வைத்திருக்கிறான். பதினேழு வயதாகும் லலித்துக்கு நான்கு வயதுக் குழந்தையின் மனவளர்ச்சிதான் உள்ளது. அவனுக்கு ஞாபகசக்தி அபாரமாக உள்ளது. அதுதான் லலித்தின் ப்ளஸ் பாயிண்ட்! அதுவும் முழு கவனத்துடன் சில நிமிடங்கள்தான் இருப்பான். அந்த நேரத்தில் என்ன சொல்லிக் கொடுத்தாலும், அதை அப்படியே நினைவில் கொண்டு விடுகிறான். மிருதங்க கிளாஸ் கூடப் போறான்” என்றார் மோகன்.

லலித்தின் திறமையைப் பார்த்து நெகிழ்ந்துபோன அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினர், லலித்துக்கு இலவச சீட்டும் கொடுத்து, அவன் ‘யோகாவில் டிப்ளமா’ பெற்றதற்கான சான்றிதழும் தந்திருக்கிறார்கள்.



‘யோகா ரத்னா’ ‘யோக பத்மா’ போன்ற உயாரிய விருதுகளோடு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு ஷீல்டும் வாங்கி வந்திருக்கிறான் லலித். யோகா சம்பந்தப்பட்ட எந்தப் போட்டிக்குச் சென்றாலும் பரிசுகளை அள்ளிக் குவிக்காமல் லலித் வருவதே இல்லை என்ற நிலை… டெல்லிக்கே சென்று குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிடமும் விருது, பணம் அன்பளிப்பு வாங்கி வந்திருக்கிறான்.

“அந்த 25,000 ரூபாயை, அவன் படித்த பள்ளிக்கே நன்கொடையாகத் தந்து விட்டோம்” என்கிறார் மோகன்.

“லலித் பிறந்த மூணாவது மாசத்துல இருந்து, எங்க வாழ்க்கை முழுக்க ஏதாவது டாக்டர், மருந்து, ஸ்கேனிங்னே ஓடிப் போயிடுச்சு. நாங்க சினிமா, ஷாப்பிங்னு வெளியே போனதே இல்லை. எப்பவாவது லலித்துக்காக பீச் போவோம். தீபாவளி, பொங்கல்னு எதையும் கொண்டாடறதில்லை. லலித்தோட பிறந்த நாளான அக்டோபர் 16ம் தேதியை மட்டும் ரொம்ப விமர்சையா கொண்டாடுவோம். ஏன்னா, அந்த நாளோடு எங்க வாழ்க்கை வேறொரு உலகமா மாறிடுச்சு” என்கிறார் பத்மா.

“உங்க இருவருடைய மனதிடமும், விடாமுயற்சியும் பெண்களுக்குப் பாடமாக அமைய வேண்டியன. அதைத் தவிர வேறென்ன சொல்ல விரும்பறீங்க பத்மா?” என்று கேட்டபோது,

“ஒவ்வொரு பெண் குழந்தையும் பூப்படைந்த நேரத்தில் ‘ஆன்ட்டிஃ ரூபெல்லா’ என்ற தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால், கர்ப்பக் காலத்தில் வைரஸ் காய்ச்சலால் கருவுக்குப் பாதிப்பு ஏற்படாதிருக்கும். இருபது வருடங்களுக்கு முன்பு எனக்கு இதை யாரும் வலியுறுத்தாததால், சிறப்புக் குழந்தையைப் பெற்றுவிட்டேன். இந்தக் கொடுமையான அனுபவம் யாருக்கும் வரக்கூடாது என்பதே பிரார்த்தனை. ஒருவேளை… பூர்வஜென்ம வினையால், ஊனமுற்ற குழந்தைகள் பிறந்தால், எங்களுக்குக் கிடைத்தது போன்ற ஆதரவான, அன்பான உறவினர்கள் அமைய வேண்டும்…” என்றார் பத்மா தன் தாயார், தங்கையின் தோள்களை அணைத்தபடி!

தனது தந்தை சிங்கப்பூரிலிருந்து லலித்துக்காக வாங்கி வந்த பொம்மைகளை பத்மா இன்னமும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

“லலித்தின் 18வது வயதில் அவனது கண்களைப் பாரிசோதிக்கும்போது, நரம்புகள் திருப்தியான நிலைமையில் இருந்து, மாற்றுக்கண் அறுவை சிகிச்சை நடந்து, லலித்துக்குப் பார்வையும் கிடைத்தால், தாத்தா வாங்கித் தந்த வண்ண பொம்மைகளைப் பார்த்து சந்தோஷப்படுவானே!” என்கிறார் நம்பிக்கையுடன்.

அவரது நம்பிக்கை பலிக்கட்டும்!

பேட்டி: அனுராதா சேகர்
படங்கள்: ஸ்ரீஹரி
http://www.mangayarmalaronline.com/monthly/page11.asp

நன்றி -

மறு பதிப்பு - http://friendlyfiretamil.wordpress.com/2007/07/09/%e0%ae%b2%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/

1 comment:

sri said...

endha katturai naanum erkanavey padichrukken, unga thayavaala eppo thirumbavum padichen.eepdi pata vishyathukku imporatance kuduthu ezhuthi erundhadhirukku romba nanri.azhugaya vandhiruchu.. ana onnu andha payyan nejammave avanga ammavukkum appavukkum permai serthuttan, "tharani aala porandhaannu solra madhiri"

செந்தில் செல்லம்மாள் - பாகம் 1

செந்தில் செல்லம்மாள் - பாகம் 2

செந்தில் செல்லம்மாள் - பாகம் 3